Sunday, June 19, 2011

திருமூல நாயனார்





சிவபெருமானின் அருளைப் பெறுவதற்காக ஏராளமான அடியார்கள் தவமிருந்தனர். எப்படியேனும் அவரை நேரில் கண்டுவிட வேண்டும் என்பது பல அடியார்களின் எண்ணமாக இருந்தது. அப்படிப்பட்ட சிவ யோகியர்களில் ஒருவர் சுந்தரநாதர். அவருக்கு பொதிகைமலையில் தங்கியிருந்த அகத்திய முனிவரை காணும் ஆவல் ஏற்பட்டது. அகத்தியரை கண்டால், சிவபெருமானை நேரில் காணும் வழியை சொல்லித்தருவார் என்ற எண்ணத்துடன் பொதிகை நோக்கி புறப்பட்டார். செல்லும் வழியில் ஏராளமான சிவத்தலங்களை தரிசித்தார். காவிரி ஆற்றங்கரையில் உள்ள சிவத்தலங்களை தரிசித்துவிட்டு, குளிர்ந்த ஆற்றங்கரையில் ஒரு மர நிழலில் தங்கினார். தூரத்தில் ஒரு வாலிபன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அவன் மாடு மேய்க்கும் அழகு சுந்தரநாதருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மாடுகள் போகக்கூடாத இடங்களுக்கு போனாலும்கூட, அவற்றை விரட்டி அடிக்காமல் அன்புடன் தடவிக்கொடுத்து அழைத்து வந்தான். சில மாடுகள் வெயிலை நோக்கி சென்றால், அவற்றை வெயிலில் மேயவிடாமல் நிழல் தரும் மரங்களின்கீழ் கொண்டு சென்று விட்டான்.

சுந்தரநாதர் அவன் அருகில் சென்றார். அவன் மாடு மேய்க்கும் அழகை பாராட்டினார். வாயில்லா ஜீவன்கள் மீது நீ கொண்டுள்ள அன்பை பாராட்டுகிறேன். உனக்கு இந்த வித்தையை யார் கற்றுத்தந்தது? நல்ல பழக்க வழக்கங்களை கொண்டுள்ள நீ, நல்ல பெற்றோருக்கே பிறந்திருக்க வேண்டும். உன் பெயர் என்ன? எந்த ஊரில் வசிக்கிறாய்? என்றெல்லாம் கேட்டார். ஐயா! நான் சாத்தனூரை சேர்ந்தவன். எனது பெயர் மூலன். நான் இடையர்குலத்தை சேர்ந்தவன். பசுக்களை அன்புடன் நடத்துவதால், அவை என்னைக்கண்டு ஓடுவதில்லை. பசுக்களிடமே எல்லா தெய்வங்களும் வாழ்கின்றன. எனவே அவற்றை அடித்தால் தெய்வத்தை அடிப்பதற்கு சமமாகும். என்னைப் படைத்த இறைவனை தண்டிக்கும் உரிமை எனக்கில்லை. இந்த மாடுகளும் கண்ட கண்ட இடங்களில் மேயச் செல்வதில்லை. எனது அன்பிற்கு கட்டுப்பட்டு நான் சொன்ன இடத்திற்கு வரும். என்மீது நம்பிக்கை கொண்ட இவ்வூர் அந்தணர்கள் அவர்கள் வீட்டு பசுக்களை என்னிடமே ஒப்படைத்துள்ளனர், என்றான் மூலன். அவன் பேசிக்கொண்டிருந்தபோதே அவனது ஆயுள்காலம் முடிந்துவிட்டது. எமதர்மராஜா அங்கு வந்து அவனது உயிரை எடுத்து சென்றார். அவன் இறந்ததைக்கண்டு பசுக்கள் கண்ணீர் விட்டன. அவனது உடலை நாக்கால் நக்கி அன்பை வெளிப்படுத்தின. ஆனால் மூலன் எப்படி எழுவான்? இதைப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரநாதர் அதிர்ச்சியடைந்தார். மூலன் இறந்துபோனதால் இந்த பசுக்களை அதனதன் சொந்தக்காரர்கள் வீட்டில் சேர்க்க வேண்டுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருக்கு எல்லா வித்தைகளும் தெரியும். எனவே தனக்குத்தெரிந்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை பயன்படுத்தி, மூலனின் உடலுக்குள் புகுந்தார். அந்த கனமே மூலன் உயிர்பெற்று எழுந்தான். உடனே பசுக்கள் மகிழ்ந்தன. துள்ளிக்குதித்து ஓடின.

உயிர்பெற்று எழுந்த மூலன் திருமூலர் ஆனார். மாலை நேரமானதும் பசுக்களை ஓட்டிக்கொண்டு ஊருக்குள் சென்றார். மூலனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. அவனது மனைவி மாலை நேரத்தில் வாசலுக்கு வந்து கணவன் வரும் வழி மீது விழி வைத்து காத்திருப்பாள். வழக்கம்போல் அன்றும் அவள் வீட்டு வாசலில் காத்திருந்தாள். ஆனால் சுந்தரநாதரோ எப்படி அந்த வீட்டிற்கு செல்வது என யோசித்தார். அதன் பின்விளைவுகள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். எனவே வீட்டிற்கு செல்லாமல் வேறு இடத்திற்கு சென்று ஒளிந்து கொண்டார். கணவன் வராமல் போனதால் பதட்டம் அடைந்த மனைவி, அவனை தேடிச்சென்றான். ஒரு இடத்தில் சுந்தரநாதர், மூலனின் வடிவில் பதுங்கியிருப்பதை கண்டாள். வீட்டிற்கு வராமல் ஏன் இங்கு வந்து ஒளிந்திருக்கிறீர்கள்? பசுக்கள் ஏதாவது காணாமல் போய்விட்டதா? உரிமையாளர் திட்டுவார் என்ற பயத்தில் இங்கு வந்து ஒளிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னிடம் கொடுத்து வைத்த பணத்தில் ஒரு பகுதியை சேர்த்து வைத்திருக்கிறேன். அதில் புதிய பசு வாங்கி உரியவரிடம் ஒப்படைத்து விடலாம். இதற்காக கவலை கொள்ளாதீர்கள். வீட்டிற்கு வாருங்கள், என அழைத்தாள். சுந்தரநாதரோ அவளிடம் பேசுவதையே தவிர்த்தார். பேசினால்கூட ஏதாவது பிரச்னை வந்துவிடும் என்பது அவரது பயம். வீட்டிற்கு வர மறுத்த அவர் ஒரு இடத்தில் தனியாக சென்று தியானத்தில் அமர்ந்துவிட்டார். மூலனின் மனைவியோ, கணவனை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழி தெரியாமல் தவித்தாள்.

கணவனுக்கு ஏதோ பித்து பிடித்து விட்டது என கருதிய அவள், தனது உறவினர்களிடம் சென்று கணவனின் நிலையை எடுத்துக் கூறினாள். அவரை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வந்துவிட வேண்டும் என அவர்களிடம் கூறினாள். மூலனின் உறவினர்கள் சுந்தரநாதர் தியானம் செய்த இடத்திற்கு சென்றனர். அங்கு சென்றதும் அவர்கள் கண்ட காட்சி ஆச்சர்யமடைய செய்வதாக இருந்தது. சுந்தரநாதரின் முகத்திலிருந்து புறப்பட்ட ஒளி அந்த பகுதி முழுவதையும் பிரகாசமாக்கியிருந்தது. ஏதோ தெய்வ சக்தி மூலனின் உடலில் புகுந்திருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். இருந்தாலும் அவரை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து சென்றாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அவரை வீட்டிற்கு அழைத்தனர். சுந்தரநாதரோ மறுத்துவிட்டார். மூலனின் மனைவி கதறி அழுதாள். இனி நான் இல்லறத்திற்கு வரமாட்டேன் என உறுதியாக சொல்லிவிட்டார் சுந்தரநாதர். வேறு வழியில்லாமல் மூலனின் மனைவி வீட்டிற்கு சென்றுவிட்டாள். அதன்பிறகு திருமூலர் தாம் விட்டுச்சென்ற உடலை தேடிச்சென்றார். அந்த உடல் கிடைக்கவில்லை. சிவபெருமானே தனது உடலை மறைத்துவிட்டார் என்பதை தெரிந்துகொண்டார். பின்பு திருவாவடுதுறை சென்று சிவபெருமானை வணங்கி, ஒரு அரசமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். மூவாயிரம் திருமந்திரங்கள் கொண்ட திருமுறையை பாடினார். திருமுறை படிக்க படிக்க இனிமையான நூல். நாயன்மார்களில் ஒருவராகவும் சிறப்பு பெற்றார்.

No comments:

Post a Comment